"வானுலகம் மிஞ்சும் மருதுபாண்டியரின் புகழை என்றும் மறக்கவும் முடியாது ,அழிக்கவும் முடியாது, வாழ்க மருது புகழ்"

Saturday, 29 October 2011

சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்





"நானும் உழுது விதைக்கும்போது அவன்தானும் உழவுக்கு வந்தானோ?உழவு துறைக்கு வந்தானோ நம்மள்உழவெருதுகள் மேய்த்தானோ?களைமுளைகளெடுத்தானோ? இப்போகஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?சனமோ? சாதியோ?கும்பினியான்நம்மள்சம்மந்தக்காரனோ கும்பினியான்மனதுபோல நடப்பானோ? நம்மள்மச்சானோ? தம்பி கிச்சானோ?" கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.

1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம். நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக கிளர்ச்சித் தீ முன்னிலும் தீவிரமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கன்னட மராத்தியப் பகுதியில் தூந்தாஜி வாக், மேற்கு மைசூரில் கிருஷ்ணப்பா நாயக், மலபாரில் கேரளவர்மா, கோவை வட்டாரத்தில் கானி ஜ கான் மற்றும் தீரன் சின்னமலை, திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், இராமநாதபுரத்தில் மைலப்பன், சிவகங்கையில் சின்ன மருது, பாளைச்சிறையில் இருந்த ஊமைத்துரை மற்றும் சிவத்தையா ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை துவக்கினார்கள். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது! ஆங்கிலேயர்களின் கண்காணிப்பு அடக்குமுறையை மீறி தமிழகத்திலிருந்து தூதர்கள் பலர் மலபாருக்கும், மைசூருக்கும், மராத்தியத்திற்கும் சென்று வந்தார்கள். உண்மையில் அவை ஒவ்வொன்றும் வீரம் நிறைந்த சாகசப் பயணங்கள்.

காவிரியை மையப்படுத்தி தென்னிந்தியாவில் உருவான இந்தப் புரட்சி, தூந்தாஜி வாக் மூலம் மன்னன் சிந்தியாவையும் இணைத்துக் கொண்டு கங்கைக் கரையையும் தொட விழைந்தது. இவையெதுவும் கற்பனையோ மிகையோ அல்ல. அத்தனையும் ஆங்கிலேய இராணுவக் குறிப்புக்களில் பதிவாகி இருக்கின்றன. தூந்தாஜி வாக்கும், சின்ன மருதுவும் போர்க்காலங்களில் வீரர்களையும், குதிரைப்படையையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்கின்றனர். தூந்தாஜி வாக்கின் படையில் கணிசமான அளவு தமிழ் வீரர்கள் இருந்ததாக வெள்ளையர்களே பதிவு செய்திருக்கின்றனர். முதலில் தென்னிந்தியாவின் மையத்திலிருந்த கோயம்புத்தூர் கோட்டையை கைப்பற்றுவதெனவும், துங்கபத்திரைப் போரை முடித்துக் கொண்டு துந்தாஜி வாக் தமிழகத்தின் வட பகுதியில் வெள்ளையரைத் தாக்குவதென்றும், அதன் பிறகு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் புரட்சியைத் தொடங்குவதெனவும் தீபகற்பக் கூட்டிணைவின் தலைவர்கள் முடிவு செய்கின்றனர். ஆனால் உளவாளிகள் மற்றும் துரோகிகள் மூலம் தகவல் அறிந்த ஆங்கிலேயர்கள் கோவைத் தாக்குதலை முறியடித்து 42 போராளிகளைத் தூக்கிலேற்றுகின்றனர். வடக்கே பல்லாயிரக்கணக்கில் மக்களை அணி திரட்டிப் போராடிய தூந்தாஜி செப் 1800 போரில் கொல்லப்படுகிறார். எனவே தமிழகத்தின் வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த தூந்தாஜியின் புகழ் வாய்ந்த குதிரைப்படை தமிழகத்திற்கு வரமுடிய வில்லை. மலபாரில் கேரளவர்மாவின் தளபதிகள் மற்றும் ஏனைய தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உடைந்து போனதாக வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம். அந்த எக்காளத்தை அடக்க சிங்கம் போல கர்ச்சித்து எழுந்தார்கள் மருது சகோதரர்கள். 18001801 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அந்தச் சுதந்திரப் போரில்தான் வெள்ளையர்கள் அதுவரை காணாத உயிரிழப்பைச் சந்தித்தனர். 1857க்கு முந்தைய காலனியாதிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு வெள்ளை உயிர்கள் வேறெங்கேயும் பலியானதில்லை என்று பதிவு செய்திருக்கிறான் வெள்ளை ராணுவ அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ்.



1801 பிப்ரவரி இரண்டாம் நாளன்று, பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுதலை செய்யும் சாகசத்திலிருந்து தொடங்குகிறது அந்த வீர வரலாறு. முழுமையான கேட்கும் திறனோ, பேசுந்திறனோ அற்ற, கட்டபொம்மனின் தம்பி குமாரசாமிக்கு மக்கள் அன்புடன் சூட்டிய பெயர் ஊமைத்துரை. ஊமைத்துரையின் வீரத்தையும் போர்த்திறனையும் மக்களைத் திரட்டும் ஆற்றலையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த பெருமதிப்பையும் கண்டு வெள்ளையர்களே அதிசயித்திருக்கிறார்கள். சுமார் 24 சைகைகள் மூலமே தன் வீரர்களைப் போர்க்களத்தில் வழிநடத்திய ஊமைத்துரை அடிக்கடி வைக்கோலைப் பிரித்து ஊதுவாராம். வெள்ளையர்களையும் அப்படி ஊதவேண்டுமென்பது இதன் பொருள். பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரையையும் கட்டபொம்மனது மற்றொரு தம்பியான சிவத்தையாவையும் விடுவிக்க மருது சகோதரர்கள் எடுத்த முயற்சியொன்று ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. விடுவிக்க வந்த சிவகங்கை வீரர்கள் பிடிபட்டுத் தூக்கிலேற்றப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் திட்டமிடப்பட்ட இந்த இரண்டாவது முயற்சியோ வெள்ளையருக்குத் தரப்பட்ட கவித்துவமான பதிலடி. முதல் பாஞ்சாலங்குறிச்சி போரில், எந்த திருச்செந்தூர் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையர்கள் முற்றுகையிட்டார்களோ, அதே திருச்செந்தூரின் பக்தர்களாகவும், விறகு சுமப்போராகவும் வெற்றிலை, இலை விற்போராகவும் வேடமிட்ட வீரர்கள் கோட்டையைச் சுற்றி வந்தனர். கோட்டைக்குள் இருப்பவர்கள் இறந்தோருக்கு திதி கொடுக்க வேண்டுமெனச் சொல்லி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று "வியாபாரிகளையும்' உள்ளே அழைக்கின்றனர். பொருள்களின் கட்டுக்குள்ளே இருந்த ஆயுதங்கள் கைமாறுகின்றன. வெள்ளையதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்புகிறார்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார். கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட மறு கணமே வெள்ளையர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. நெல்லைச் சீமையில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாளையங்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டன. தூத்துக்குடித் துறைமுகமும் கைப்பற்றப்படுகிறது. அங்கிருந்த வெள்ளை அதிகாரி மேஜர் பானர்ட்டின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டதால் யாரையும் கொலை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறார் ஊமைத்துரை. கிளர்ச்சியாளர்களின் குடிவழியையே அழித்து வந்த வெள்ளையர்களிடம் எக்காலத்திலும் காணக்கிடைக்காத பண்பு இது. கர்னல் மெக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை அழிக்க வந்த படையை குலசேகர நல்லூரில் மறித்துத் தாக்கி ஓடவைத்தார் ஊமைத்துரை. 50 நாட்கள் கழித்து கர்னல் அக்னியு தலைமையில் பெரும் படையும் பீரங்கிகளும் வந்த பிறகே அந்தக்கோட்டை தன் இறுதி மூச்சை விடநேர்ந்தது. கோட்டைக்குள்ளேயும் வெளியேயும் வேல் கம்பையும் வாளையும், துப்பாக்கியையும் பிடித்தவாறு 1500 பிணங்கள் கிடந்தததாகவும், பிணக்குவியலுக்குள்ளே இருந்தும் பாஞ்சை வீரர்கள் தங்களை வாட்களுடன் தாக்கியதாகவும் வெள்ளையர்கள் அச்சத்துடன் குறிப்பிடுகின்றனர். குற்றுயிராய்த் தப்பிய ஊமைத்துரையை மக்கள் காப்பாற்றுகின்றனர். எஞ்சிய வீரர்களுடன் ஊமைத்துரையும், சிவத்தையாவும் மே 28ஆம் தேதி கமுதிக்கு வந்து சேருகிறார்கள். சின்ன மருதுவும், பெரும் திரளான மக்களும் அவர்களை வரவேற்று சிறுவயலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மருது ""ஐரோப்பியர்களைக் கண்ட இடத்தில் அழித்து விடுங்கள்'' என்று மக்களுக்கும் ஆங்கில இராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களுக்கும் பின்னாளில் பகிரங்கமான பிரகடனத்தை வெளியிடும் சின்ன மருது ஊமைத்துரையை வரவேற்கிறார். இதன் விளைவாக வெள்ளையரோடு ஏற்பட இருக்கும் போரையும் மிகுந்த அலட்சியத்துடன் வரவேற்கிறார். மருதிருவரின் இந்த வீரத்திற்கு நீண்ட பாரம்பரியமே இருக்கிறது.
______________________________________________

மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும், உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கபழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னது குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளியவேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர். விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதரலியின் ஆட்சியில் இருந்தது.

அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம் உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன மருது. இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதேகால கட்டத்தில், 1780ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர். ஹைதரின் திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரியமருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது. ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன.

இத்தாக்குதல்களின் போது தற்காலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுகநாதன் மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790 முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர். ""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். 1790களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500 வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடுபடுகிறார்.

இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு, கட்டபொம்மனைத் திருநெல்வேலிக் கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள். 1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர். சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத்தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: ""சின்ன மருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான்.

ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.'' தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்ததம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான். ஆனால் ""துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்'' என்று புதுக்கோட் டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது. வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமை யிலான படை மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர் முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. "திப்புவையே வென்று விட்டோம்' என்ற ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது. அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத் தடுமாறி இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை. சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, நாயினும் கீழான பிறவிகளை தேடிக் கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறான்.

""சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்... எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும்.... மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டுகிறான். ""உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்'' என்கிறான் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது. ஜூன் 12ம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் உடனே பதிலளிக்கிறார் சின்ன மருது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...
ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு, மருது பாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.( 1801 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப் பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது).

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் அக்னியூ. ""ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா'' என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை "நாட்டு விடுதலை' என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.
மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். ""தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது'' என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.


உண்மைதான். கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும்போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ""கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரண தண்டனை'' என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத் தடை செய்த கம்பெனி நிர்வாகம், அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக் கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாபின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.
அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்லமுடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரியமருதுவும், வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.


துரோகி கௌரி வல்லப உடையத்தேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கைச் சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள், உறவினர், ஏனைய கிளர்ச்சியாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர். அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளயர்கள் விட்டுவைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டுவைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.

மக்களோ, மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கி விட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு, கல்லாய் இறுகிப்போன கையறு நிலையின் சாட்சியமாய் நம்முன்னே நிற்கிறது. 

எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது. ""ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்...'' உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது.

தேவர் ஜெயந்தி


தேவர் திருமகன் 30-10-1908 அன்று பிறந்தார்
தேவர் திருமனார் பிறவிலேயே புத்தர், வீரர் விவேகானந்தர், அருள்வள்ளல் இராமலிங்கர், இவர்களைப்போல இளமையிலேயே மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசையைத் துறந்தார். தன் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்கே அளித்தார். தன் மூச்செல்லாம், பேச்செல்லாம் இந்தியத் திருநாடு! அதன் விடுதலை! விடுதலை என்றே வாழ்ந்தார்! அதற்காக அவர் சிந்திய ரத்தம் செய்த தியாகம் ஆயிரம்! ஆயிரம்! அவர் இம்மண்ணில்வாழ்ந்த நாட்கள் 20,075. சிறையில் இருந்த நாட்கள் 4,000. அந்த விடுதலை வேந்தர் இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்றார்! விடுதலை பெற்ற இந்தியத் திருநாட்டில் இந்தியனின் நல்வாழ்விற்காக வாழ்ந்தார் தமிழ்ப் பண்பாட்டிற்காக வாழ்ந்தார், தெய்வீகத்திற்காக வாழ்ந்தார் 30-10-1963ல் இறைவனடி சேர்ந்தார் ஆம் இந்நாட்டில் கங்கையும் யமுனையும் பாயும் வரை தேவர் வாழ்வார் இம்மண்ணில் இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும் வரை தேவர் பெருமானின் புகழ் நிலைத்து நிற்கும்.
வாழ்க தேவர்! வளர்க அவர்புகழ்!! ஓங்குக உலகம்

முத்துராமலிங்கதேவர் மரணம்



தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார்.
கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார்.
மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.
உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
கடைசி விருப்பம்
"என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது.
தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம், 30_ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அனுதாபக் கூட்டம்
அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள். அண்ணா பேசுகையில் கூறியதாவது:_
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர்.
எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார்.
ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."
இவ்வாறு அண்ணா கூறினார்.
காமராஜர்
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.
வாழ்க்கைக்குறிப்பு
முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள்.
பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.
1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார்.
வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார். அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார்.
1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார்.
சட்டசபை வாழ்க்கை
முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப் பட்டார்.
பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத் துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்தார்.
கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத் துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நேதாஜியை கவர்ந்தவர்
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர்.
1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.
கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.
ராமநாதபுரம் கலவரம்
1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது. அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், முத்துராம லிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட் டார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000.
ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.
பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

இந்நாட்டிற்ககா வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்



பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.

அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து "காங்கிரசைக் காத்தவர்" எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.

1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.

அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்

18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார்.

இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.

1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார். வாழ்க தீரர் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்!

Friday, 28 October 2011

பாண்டியர் காவியம் (மருது வரலாறு)

அன்பு நண்பர்களே!
1986 ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்துக்கான காப்பியப் போட்டியில் பரிசு பெற்ற "பாண்டியர் காவியம்" என்னும் கவிதை நூலைத் தொடந்து வழங்கவிருக்கின்றேன்.
இந்நூல், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களைத் தலைவராகக் கொண்டியங்கிய 'குழந்தை எழுத்தாளர் சங்கம்; நடத்திய காப்பியப் போட்டியில் வெற்றி பெற்றது. குழந்தை இலக்கியத்துக்கான ஏ.வி.எம் பரிசு பெற்றது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களால் பரிசளிக்கப் பெற்றது.
அந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள மு.பகத்சிங் சிறந்த கவிஞர். பாரதிதாசன் இலக்கியத்தில் தோய்ந்தவர்.
இலக்கியத்தின் சுவையறிந்து தங்களின் கருத்துகளைப் பின்னூட்டங்களாக அளிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
இரவா

பாண்டியர் காவியம்
(சுதந்திர தீபம்)
அணிந்துரை

வீரத்தின் விளைநிலம் தமிழகம்! வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல், உயிர்ச் சொல் வீரம். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மருது வரலாறு அதற்குச் சான்று! சிறுவர்தம் சீரிய உள்ளங்களில் சிந்தைகுளிர, வீரம் மிளிரப் பாடி மகிழ்ந்திருக்கிறார் இரவா - கபிலன். சுதந்திர தீபம் இரவா-கபிலனின் கற்பனைத் திறன் பற்றி உலகுக்குணர்த்தும் உயரிய காவியம்.
இக்காவியத்தை ஆழ்ந்து படித்து இன்புற்றேன். கவிஞரின் திறன் கண்டு வியந்தேன்.
வைகை வர்ணனை :- .
வைகைப் பெண்ணைத் தன் சொல்லோவியம் கொண்டு அலங்கரித்து நம் உள்ளங்களைல் உலவ விட்டுள்ளார் கவிஞர்.
"இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்"
என்றும்,
"புதுமனை புகுந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல,

வதுவைபோல் வந்த வைகை"
என்றும் சுவையோடும் கற்பனை நயத்தோடும் வர்ணிக்கிறார்.
"செல்வத்தின் செல்வ மான
சிரஞ்சிவி வைகைப் பெண்ணாள்"

என்று கொஞ்சி மகிழ்கிறார்.
வைகை பற்றிக் கவிதை தீட்டும் கவிஞரின் திறன் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்றதோர் சுவையமுதை நினைவூட்டவல்லது.
வீரம் :-
மருது பாண்டியரின் வீர வரலாற்றே இச்சிறு காவியத்தின் உயிர் நாடி. வீரத்தை விளைக்கும் வரிகளே முதலிலிருந்து இறுதிவரை துள்ளி வந்து இதயத்தை அள்ளி விடுகின்றன.
எடுத்துக் காட்டாய் சில வரிகள் இதோ ..... !
"கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொ டாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
..... ..... ....
ஆண்டிகள் போல வந்த
அந்நிய வெள்ளை நீங்கள்
பாண்டியர் எம்மைப் பார்த்துப்
பரம்பரை கேட்கின் றாயா?"

"பாளையக் காரர் தம்மைப்
பரங்கியர் கேலி செய்தால்
கூளங்கள் போலச் செய்வோம்
குருதியில் குளிக்க வைப்போம்!

கோழையின் நெஞ்சிலே வீரமெனும் குருதியோட வைக்கும் கூரிய வரிகள்!
"உய்வதோ கொஞ்ச நாள்தான்
உரிமையும் இழந்து விட்டால்
அய்யமும் கொள்ளு வாரே
அருமையாய் நம்மைப் பெற்றோர்!"

என்று, மருது கூறும் வரிகள், மனோன்மணியத்தில் ஜீவகன் தன் படைகளுக்குக் கூறும் வீரவரிகளுக்கு இணையாக உள்ளன.
வடுகநாதரின் வீரத்தைக் குறிக்கும் வகையால்

"நின்றவர் நின்ற வாறே
நெருப்பென வாளை வீசிக்
கண்ணிமை இமைக்கு முன்னே
களத்தினில் பலரை வீழ்த்தும்"

என்று பாராட்டி வீரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் ஆற்றல் சிறப்புக்குரியது.
"வெற்றிமகள் வருகை கண்டு
வேல்வீர மறக்குலத்து மாத ரெல்லாம்
சூலுற்ற வயிற்றையும் பெருமை யோடு
சுகமாகத் தடவிநிற்கும் தாய்மை யுண்டு"

என்று கூறும் வரிகள் அப்படியே புறநானூற்று வீரத்தாய்மார்களை நினையூட்டுகின்றன.
போர்க் களக்காட்சிகள்:
"விருந்துக்கும் வேட்கைக்கும்
ஆசை கொண்டு
பருந்துகளோ திரண்டுவந்து
வானை மூடும்"

என்றும்,
"முண்டங்கள் குன்று போலும்
முரிந்துவீழ் கைகால் எல்லாம்
துண்டங்கள் செய்த வாழைத்
துணுக்கெனக் கிடந்த தம்மா"

என்றும், போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாங்கு கலிங்கத்துப் பரணிக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன்.
உவமை:
அணிகளில் சிறந்தது உவமையணி. தமிழ் நாட்டுப் பாட்டிகள் வாயிலிருந்தும் வருவது உவமை அருவி. அத்தகு உவமையணியை ஏனோ கவிஞர் வெறுத்து விட்டார். ஓரிரு உவமை தவிர ஒளிமிகு காவியத்தில் உவமைகளைத் தேடி அலைந்தாலும் கிடைக்கவில்லை. அதனால் தானோ ஓரிடத்தில்,
"உவமானம் எதைச் சொல்லி உரைப்பேன்?" என்று கூறுகிறார்.

தலைவனை இழந்த படையின் நிலையைக் குறிக்கும் போது,
"இதயந்தான் மடிந்தபின்னே
உடலி லுள்ள
இருகரமும் கால்களுமே
என்ன செய்யும்"

என்று கூறும் போது ஓரிரு உவமைகள் தந்தாலும் உள்ளம் சிலிர்க்கச் செய்யும் உவமைகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.
பொம்மை ராஜாவாக உடைய தேவனுக்கு முடிசூட்டுவதைக் கவிஞர், "அம்மிக்கு அலங்காரம் செய்வதைப் போல்" என்று கூறுவது உவமையின் உச்சிக்கே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

சமதர்ம நோக்கு:
மருது பாண்டியன் கூற்றாக,

"முறையறிந்த மன்னவராய் இருந்தால் மட்டும்
முழுநிறைவு வாராது! மக்கள் நெஞ்சால்
நிறைவுகொளச் சமதர்மம் காணும் போதே
நீதியின் மைந்தரென ஏற்றுக் கொள்வார்"

என்று முடியாட்சி மன்னனும் சமதர்ம சமுதாயம் படைக்க விழைந்து கூறுவதன் மூலம் கவிஞரின் சமதர்ம நோக்கு தெளிவாக விளங்குகிறது.
தேர் செய்த சிற்பியை மன்னனெனச் செய்யும் நிகழ்ச்சியில்,
"தொழிலொன்றே முதலாகக் கொண்டு வாழும்
தொழிலாளி தானிந்த மன்னின் மன்னன்!"

என்று கூறுவதும் பாரதிதாசன் கவிதையில் தொடங்கிவைத்த சமதர்ம சிந்தனைக்குச் சீர் கூட்டுவதாக அமைந்துள்ளது.
சூழ்ச்சி:
சூழ்ச்சி இல்லாத காவியம் சுவைபடாது. மருது பாண்டியர் காவியத்திலும் சூழ்ச்சி உண்டு. சூழ்ச்சியின் மறு உருவான தொண்டைமானை,

"சொல்லாலே அன்புதனை வாரி வீசிச்
சூழ்ச்சியை நெஞ்சிற்குள் மறைத்து வைத்தே
எல்லோரும் எம்தோழர் இனியோர் என்றே
இனிப்பொழுகப் பேசுகின்ற தொண்டை மானும்"

என்று கூறுவது,
"கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்
கொடுங்கொடியோன் நரிக்கண்ணன் ......."

என்று பாண்டியன் பரிசில் பாரதிதாசன் கூறுவதற்கு ஒப்பாகச் சிறப்பு வாய்ந்த வரிகள்.
சாதி எதிர்ப்பு:
அன்றும் இன்றும் சாதியின் கொடிய கரங்களிலே சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைஇன்பம் கவிஞருக்கு எழுந்துள்ளது. அதைக் கூறுமுகத்தால்,
"மருதுவின் சேர்வைச் சாதி
மண்ணிலே தாழ்ந்த தென்று
கருதிய உடைய தேவன்
கக்கினான் பொய்யை ஊரில்!
விருதெனும் வீர மெல்லாம்
வீணது சாதிச் சொல்லால்!"

என்று சொல்லும் போது சாதியின் முன்னே சாதனைகள் மண்டியிடும் என்பார் கவிஞர். சாதியிலிருந்து தமிழ்ச் சமுதாயம் மீள்வது எந்நாளோ?
போரினும் அமைதியே சிறந்தது:
வீரர்க்குப் போர்க்களம் விருந்து மேடை! வெற்றியெனும் கனிதன்னை அருந்தும் மேடை! நாட்டைக் காக்கப் போரிடலாம்! ஆனால், போரே வாழ்வு என்றால் நாடு சுடுகாடாய் மாறும்! அமைதியில் பூப்பதுதான் முன்னேற்றம் என்னும் அழகுப்பூ! இத்தகு உயரிய சிந்தனை கவிஞரின் கவிதையிலே உன்னதமாய் வெளிப்படுகிறது.

"போருக்கு வாடா என்று
போர்க்களம் நோக்கி நாமும்
போருக்கே அணிவ குத்தால்
போருக்குப் பின்னே நாடு
சீரற்று, சிறப்பு மற்று
சிவகங்கைச் சீமை மக்கள்
வேருக்குள் வெந்நீர் விட்டால்
விளைவுகள் என்ன வாகும்?"

என்று கூறும் போது விடுதலைக்குப் பிறகு பல போர்களைச் சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நடக்கத் தடுமாறும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா?
கவித்திறன்:
மருது பாண்டியரின் வீர வரலாற்றைக் குறைவு படாமல் சுவையுடனும் தடைகாணா நடையுடனும் கூறியிருப்பது பாராட்டுக்குறியது. வேகம்! வேகம்! வேகம்! எந்த இடத்திலும் வேகத்தடையில்லை!
விருத்தங்களினால் அமைந்துள்ள இந்தக் காவியம் கற்கண்டுத் துண்டுகளாக இனிக்கின்றது.
கதையினைச் சொல்லி முடிக்க வேண்டுமே என்று, கவிஞர் ஓடும் வேகம் தெரிகிறது. சில இடங்களில் நின்று இன்னும் இலக்கியச் சுவைகளைத் தூவ முயற்சி செய்திருக்கலாம்!
எனினும் 'உணர்ச்சியே கவிதையின் உயிர் நாடி' என்பதை உணர்ந்து வீரம் வரும் போது எழுந்தும், சோகம் வரும் போது விழுந்தும், இன்பம் வரும் போது மகிழ்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும் மாறத் தவறவில்லை கவிஞர்! கோபம் வரும் போது எல்லை மீறிச் சொற்கள் வருவதும் சுவையாகத்தான் உள்ளது.

அழகு முத்துக்கோன் சேர்வை (முக்குலத்து வீரன் )




(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்துகளும் மிக அரிய தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை.
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு. )
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.
ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.
வீரன் அழகுமுத்து சேர்வை

நூல்             :  மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை
ஆசிரியர்    :  சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்
வெளியீடு  :  அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,
திருநெல்வேலி – 627 001
நுழைவாயில்:
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க!
ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும் இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத் தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம் கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.
இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான் இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள் வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.
வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக நம்புகிறேன்.
இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன் அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும்.
போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும் இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது, அவர்களுக்கு நல்லது அல்ல.
நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன். ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது.
இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப் புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில் இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று உணர்வுடன் எழுதினேன்.
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!
(- பாவேந்தர் பாரதிதாசன்.)
அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.
வரலாறைத் தேடி 

வரப் புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயர கோன் உயரும்!
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.
இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!
கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன் அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.
முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம், தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத் தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம்.
சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் – மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
- என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் இவை.
தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம், தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.
தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன் பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார் பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”
என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ் தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும் காணலாம்.
இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி, போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம் பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.
தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும் தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப் பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.
செப்பேடு:
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு”
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத உணர்ச்சி வசப்படாமை தேவை.
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர்.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன், மன்னன்,ராஜா).
வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர்.
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.

செப்புப்பட்டயம்:



மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை.
இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.
இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர் பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.
இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும்.
மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.
கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.
அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது ‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை குறிக்கும் சொல்லாகும்.
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று. கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு மொழியாக உள்ளது.
இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள் பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும் சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது.
காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக் குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று.
பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!
இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்!
துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்.
அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது.
ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.
இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின.
மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.
அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று.
இதோ அந்தக் கல்வெட்டு.
ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம் அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ, விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
வழக்குகளும் ஆவணங்களும்:

நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும், போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே.
பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும் உண்டு.
ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.
சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும் பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.
ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள், நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம்.
சூடேற்றிக் கொள்வோம்:


அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம். வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும் அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம் தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.
சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர் மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’ இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர் (மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.
அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார் என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள்.
ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன் சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று வழங்கலாயிற்று.
அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே, இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன், கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை.
பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி
ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்!
நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், “கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.
“மறவர்” என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும்.
“அகமுடையார்” என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.
இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம்.
வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.
அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.
அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது.
1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.
அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது.
அதில்
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி
சேர்வைக்காரனின் புத்திரர்
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:-
அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா
இ) துரைராஜா சேர்வைக்காரர்
ஈ) பால்துரை சேர்வைக்காரர்
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.
இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் இச்சிறுநூல் எழுதப்பட்டது.
கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.
தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.
“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”
இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் மனநோகச் செய்யாது. யார் மீதும் நமக்கு வெறுப்போ, காழ்ப்போ இல்லை.
சமுதாய நல்லிணக்கம் பேணுவோம், நமது சரித்திரத்தை காப்போம்.
வாழ்க தமிழ்! வெல்க வீரத்தமிழர்!
சிறப்பு நன்றி : வரலாற்று உண்மைகளை உலகிற்கு அறிய தந்த சேவாரத்னா நெல்லை திரு. மா. சேதுராமபாண்டியன் அய்யா அவர்களுக்கும்,இந்த பெரிய பதிவை எங்களுக்கு வழங்கிய உறவினர் திரு. தனியன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.