"வானுலகம் மிஞ்சும் மருதுபாண்டியரின் புகழை என்றும் மறக்கவும் முடியாது ,அழிக்கவும் முடியாது, வாழ்க மருது புகழ்"

Friday, 11 November 2011

மயிலப்பன் சேர்வைக்காரர்


இராமநாடபுரத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை(1762 - 1809) 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.
கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" என்றழைத்தனர்.
1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். [[[1799]], ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன. தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.
போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டார்/
மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரது ராணுவப் பணியில் இருந்தார். இவர் 'மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரை கைது செய்தனர். திருச்சிக் கோட்டையில் இருந்து முத்துராமலிங்க சேதுபதியை காவலர்களுக்கு தெரியாமல் தப்புதவதற்குக்கூட முயன்றார். அத்திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார். அப்பொழுது நடைபெற்ற முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய வீரபுருசர் அப்பொழுது உள்ள காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு முகவை மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும் வைகை ஆற்று நீரின் சம்பந்தமாகவும் பல எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக அவ்வப்பொழுது பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற அச்சமயத்தில் மயிலப்பர் சேதுபதியின் அன்புக் கட்டுப்பாட்டிருந்ததினால் மருதுபாண்டியருக்கும் அவருக்கும் பகை உணர்வு இருந்தது. காலப்போக்கில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவரின் உண்மையான குணத்தைப் புரிந்து அவரின் நோக்கத்தை திருச்சிக் கோட்டையில் கைதாகிய முத்துராமலிங்க சேதுபதியிடம் விபரம் சொல்லி மருதுபாண்டியரின் பால் உள்ள கசப்பான நிலையை மறையச் செய்தார். மயிலப்பர், சேதுபதி, மருதுபாண்டியர் இணைந்து செயல்பட்டனர். அதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமாயின் கமுதி கோட்டையைத் தகர்த்து அங்குள்ள போராளிகளை விடுதலை செய்ய மருதுபாண்டியர் கொடுத்துதவிய வீரர்கள் மற்றும் போர் ஆயுதங்கள், அன்னாளில் ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளில் கடுக்காய் கொடுத்த பெரிய போராளி வீரர்கள் இந்த 'மயிலப்ப சேர்வை”, 'நைனப்பன் சேர்வையும் பெரியமருதுவும்” நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மருதுபாண்டியர்களின் படையில் இருந்தார். அவரது வீரத்தையும், உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்.

'நைனப்பன் சேர்வை” நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். 'சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக் கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. 'நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பர்லாங் தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்.... பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.

சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என. பலர் 'சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் மன்னர். கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.
ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த 'வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வழியைப் பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடிச் சரியா வயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓடத் தலைப்பட்ட நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் பெரியமருது பாண்டியர். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் - உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் பெரிய மருதுபாண்டியர்.

நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசு தார் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் 'அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.

நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப் பல நூறு வீர நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மக்களை வீரமிக்கவர்களாக ஆக்கி வைத்திருந்தார் பெரிய மருதுபாண்டியர்.

ஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கிலடப்பட்டனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கம்பெனியாரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார்.

Thursday, 10 November 2011

மருதரசர் கோவில் திருப்பணிகள்



இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச் சிறப்பித்துள்ளனர். அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள் எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமைப் பாட்டையும் ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.

"கரும லையிலே கல்லெடுத்துக்
காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருதுவாரதைப் பாருங்கடி."


அக்கோயிலின் வெளிப்புறத்தின் கிழக்குப் பகுதியின் பழைய வாயிலுக்கு எதிரில் மருது சகோதரர்களின் சமாதிகள் உள்ளன. பழைய கோபுரத்தின் உள்ளே கருங்கல்லால் வடிக்கப்பட்ட அவர்களின் இருவரின் திருவுருவம் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27 தேதிகளில் அவர்களுக்கு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

குன்றக்குடி கோயில்

குன்றக்குடி மலை மேல் கோபுரமும் மண்டபமும் கட்டியுள்ளனர். அங்குள்ள மருதாபுரி என்னும் குளமும் மருது சகோதரர்கள் வெட்டியதே ஆகும். அக்கோயிலில் அவர்களின் சிலைகள் பெரிய அளவில் இருக்கின்றன. அக்கோயிலிலுள்ள முருகனுக்குச் சாத்தப்படும் பொற்கவசத்தில் 'சின்னமருது உபயம்” என்னும் சொற்கள் காணப்படுகின்றன.

சருகணி மாதா கோயில்
சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில் மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே தேரோட்டம் நடைபெறுகிறது. சிவகங்கையில் உள்ள திருஞான சுப்பிரமணியார் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயில் கட்டப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிவகங்கைப் பாளையத்தின் இரண்டாம் அரசர் முத்துவடுகநாதர் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு நெடுநாள்களாக மகப்பேறு இல்லாதிருந்தது. அரசரின் கடைசி நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிள்ளைப் பேறுண்டானால் கோயில் ஒன்று கட்டுவதாக முத்துவடுகநாதர் இறைவனை வேண்டியிருந்தார். ஆனால் எதிர்பாராமல் 25-6-1772 அன்று நடந்த போரில் அவர் இறந்துவிடவே கோயில் கட்ட இயலாமல் போய்விட்டது. அரசரின் அவ்வேண்டுதலை அறிந்த மருது சகோதரர்கள் அக்கோயிலைக் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கோயிலின் முன்மண்டபத்தில் இடப்புறம் உள்ள முதல் தூணில் இச்செய்தியை உறுதிப்படுத்துவதற்குரிய கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.


திருமோகூர் கோயில்
திருமோகூர் என்ற வளர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லவும் ரோட்டில் 3 கல் தொலைவில் உள்ளது. அங்கு காளமேகப் பெருமானுக்கு இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அக்கோயிலின் முகப்பு முன் உள்ள மண்டபம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அக்கோயில் முன்பு மருது சகோதரர்களின் சிலைகள் இருக்கின்றன. மருது சிலைகள் மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகுடன் உள்ளது. ஆனால் தூசு படிந்து யாரும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலில் பூசை செய்வதற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய சிற்றூர்களை தானமாகக் கொடுத்ததாகத் தெரிகிறது.

நரிக்குடி கோயில்
மருது சகோதரர்கள் தம் சொந்த ஊரான நரிக்குடியில் இரண்டு கோயில்களைக் கட்டினர். ஒன்று அன்னதான மருகி விநாயகர் கோயில், இன்னொன்று அழகிய மீனாம்பிகை கோயில். பாண்டியன் கிணறு என்னும் பெயரில் ஒரு கிணற்றையும் வெட்டி உள்ளனர்.

வீரக்குடி கோயில்
வீரக்குடியில் உள்ள முருகன் கோயிலில் முன்புறத்தில் பெரிய மருதுவின் சிலை ஒன்று உள்ளது. எனவே அக்கோயிலைப் பெரிய மருது கட்டியதாகச் சொல்கிறார்கள்.

திருக்கோட்டியூர் கோயில்

மருது சகோதரர்கள் திருக்கோட்டியூரில் உள்ள தலத்தையும் குளத்தையும் புதுப்பித்து இறைவனுக்கு தேர் ஒன்றினையும் செய்தளித்துள்ளனர்.

திருப்பத்தூர் கோயில்
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயிலில் திருத்தலைநாதர், சிவகாமியம்மன் திருவுருவங்கள் உள்ளன. அக்கோயிலுக்கு உள்ளே வைரவன் கோவில் உள்ளது. அக்கோயில் மண்டபத்தில் பெரிய மருது, சின்ன மருது சிலைகள் உள்ளன. அக்கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் குன்றக்குடி ஆதினத்திற்கு சொந்தமானது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24ந் தேதியன்று மருது சகோதரர்களின் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இதைக் காணலாம்.

திருப்பாச்சேத்தி கோயில்

திருப்பாச்சேத்தியிலுள்ள சுந்தரவல்லியம்மன் கோயிலுக்கு மரகதப் பச்சையில் சிவலிங்கம் ஒன்று மருது சகோதரர்களால் செய்தளித்ததாகக் கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருதுபாண்டியர்களின் திருப்பணிகள்
மதுரையில் மங்காத புகழ் நிறைந்து விளங்கும மீனாட்சி அம்மன் மீது மருதுபாண்டியர்களுக்கு எப்போதும் அளவற்ற பக்தி இருந்தது. சிவகங்சைச் சீமையில் வாழ்வு எல்லா மக்களும் காளையார்கோயிலின் உச்சியில் நின்று மதுரை கோபுரத்தை அந்த மீனாட்சி தாயை தரிசித்து மகிழ்ச்சி அடைந்ததாக வரலாறு கூறுகிறது.
மீனாட்சி தாய்க்குப் பிள்ளை போன்றவர்களும் மீனாட்சியின் அருள் பெற்றவர்களுமான மருது பாண்டியர்கள் சிறப்பு வாய்ந்த அழகுமிக்க இரண்டு திருவாச்சித் தீபங்களை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழங்கி இருக்கின்றார்கள். அந்த இரண்டு திருவாச்சித் தீபங்களும் இன்றைய தினத்திலும் மீனாட்சித் தாய்க்கு ஒளியினை வாரி வழங்கியபடியே மருதுபாண்டியர்களின் பெயரையும் புகழையும் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. தான் வழங்கிய திருவாச்சித் தீபங்களுக்குப் பசுவின் நெய்யைத் தவறாமல் வழங்குவதற்காக மருதுபாண்டியர்கள் ஆவியூர் என்ற கிராமத்தையே மானியமாக கொடுத்திருக்கின்றார்கள்.

'பூவனேந்தல், உப்பிலிக்குண்டு, கடம்பக்குளம், மக்கரந்தல், மாக்குளம், சீசனேந்தல் ஆகிய கிராமங்களை மதுரை மீனாட்சித் தாய்க்கு பூஜை கைங்கரியத்துக்காக ஒதுக்கி வைத்து ஒளிமயமான புகழை என்றும் பெற்றிருக்கிறார்கள் மருது சகோதரர்கள். தென்னகத்தில் திகழ்கிற ஆலயங்களில் தலைசிறந்தது மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலாகும். இந்த மீனாட்சிக் கோயிலில் உள்ள கல்யாண மண்டபம் சிறந்த சிறப்பையும் கைவண்ணத்தையும் உடையதாகும். இங்கு இன்றளவும் கல்யாண சுப காரியங்கள் ஊரில் பல பகுதிகளில் உள்ள மக்கள் கூடி முடிவு எடுக்கின்றனர். இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கும் பல்வேறு வகையான சிலைகளில் மருதுபாண்டியர்களின் குடும்பத்தினரின் சிலைகளும் அடங்கி உள்ளன. வடக்குப் பகுதியில் உள்ள தூணில் பெரிய மருதுவின் சிலை உள்ளது. அந்த கல்யாண மண்டபத்தை மருது சகோதரர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன் சமீபத்தில் உள்ள மண்டபம் இன்று சேர்வைக்காரர் மண்டபம் என அழைக்கப்படுகிறது.

சிவகங்கைக்கு அருகில் உள்ள ஏரியூரில் அஷ்டோத்திர ஜபம் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் பெரிய மருது அவர்கள் மல்லாக்கோட்டைப் பகுதியில் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு போர் காரியங்களைச் செய்து கொண்டு பெரிய மருது அவர்கள் தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார். ஏரியூர் கண்மாய்க்கரை வரையில் காற்றாகப் பறந்து வந்த குதிரை கரைக்குச் சமீபமாக வந்ததும் தனது கால்களைப் பின்னிக்கொண்டு நகர மறுத்தது. எவ்வளவோ விரட்டியும் மிரட்டியும் அடித்தும்கூட குதிரை ஒரு அங்குலம் கூட நகர மறுத்தது. உடனே அங்கே இருந்தவர்களிடம் மருதரசர் 'என்னப்பா இந்த இடத்தில் விசேஷம்?” எனக் கேட்டார்.

'வந்துங்க - மன்னரை இந்த இடத்தில் கழுகு ஐயனார் குடி கொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்கு நல்லதொரு திருப்பணி செய்வதாக ஒத்துக்கொண்டால் உங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும். குதிரையும் விரைந்து செல்லும்” என்றார்கள். அப்படியா? என்று ஆலோசனையில் இறங்கினார் மருதரசர். 'சரி சில நன்செய், புன்செய் நிலங்களைக் கழுகு ஐயனார் கோயில் திருப்பணிக்காக மான்யமாக கொடுப்பேன்” என்றார். குதிரையும் பின்னிய கால்களைப் பிரித்துக் கொண்டு தொடர்ந்து ஓடத் தொடங்கியது. ஏரியூரில் எப்போதும் இன்றும்கூட பங்குனி உத்திர நன்னாளில் மருதுபாண்டியர்கள் பெயரால் 'அஷ்டோத்திர ஜபம்” மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இப்படி ஒவ்வொரு திருப்பணிக்கு ஒவ்வொரு காரண காரியங்கள் உள்ளன. அதை விரிவாகச் 'சொன்னால் புத்தகத்தின் பக்கங்கள் போதாது. எனவே தான் பல நிகழ்வுகளை சுருக்கமான அளவில் தரப்பட்டுள்ளது.

Monday, 7 November 2011

மருது குடும்பத்து நகைகள் வழக்கு



மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள்24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால்மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந்தாரால் பறித்துக்கொள்ளப்பட்டன.
அவ்விதவைகள் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை விதவைகள் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார்திருச்சியிலுள்ள Southern Provincial Court of Appealல் மேல் முறையீடு செய்தார். 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.


உசாத்துணை

Sessional Papers Printed By Order of the House Of Lords 1841 அதில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு judgment 363 of Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806. No 363 Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806.......... as the property appears to have been taken by the Zemindar during the operation of military law in the district........

எழுதப்படாத சரித்திரம்...! மருது பாண்டியனின் கடைசி மகன்...!



இந்திய வரலாற்றாசிரியர் பலரும், இந்தியச் சுதந்திர யுத்தம் 1857 ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றே இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் எழுதிய ‘1857 இந்திய சுதந்திர யுத்தம்’ என்கிற நூலையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அந்த 1857க்கு முன்பே, நூறு ஆண்டுகளுக்கு முன்பே புலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார் என்பதும், சுதந்திர யுத்தத்தின் முதல் பலியே அவர்தான் என்பதும், இன்றும் வடநாட்டு வரலாறு எழுதுபவர்கள் ஏற்காத உண்மையாக இருக்கிறது. புலித்தேவரைப் பின்பற்றி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு மேடை ஏறுகிறார். அதற்கு அடுத்தபடியாகத் தங்கள் உயிர்த் தியாகத்தைச் செய்தவர்கள் மருதுபாண்டியர்கள். பெரிய மருது, சின்ன மருது மட்டுமல்லாமல், அவர்கள் பரம்பரையையே கொன்று தீர்த்தார்கள் வெள்ளையர்கள். வீரமும் தியாகமும் செறிந்த அந்த வரலாற்றிலிருந்து ஒரு மாபெரும் பகுதியை அறிந்துகொள்வோம்.

ஆற்காடு நவாப்புகள், வெள்ளையரிடம் பட்ட கடனுக்காகவும், பணத்தேவைக்காகவும், பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை வெள்ளையருக்குத் தாரைவார்க்கிறார்கள். இந்தியாவைக் கொத்தடிமை செய்து கொள்ளும் உரிமையை இதன் மூலம் நவாபு, ஆங்கில வியாபாரிகளுக்குக் கொடுத்தார். வெள்ளையர், மனம்போன போக்கில் வரித் தொகையை நிர்ணயித்ததும் அல்லாமல், அதை வசூலிக்கும் முறையில் பாளையக்காரர்களின் மானத்தையும் மரியாதையையும் சவாலுக்கு அழைத்தனர். பல பாளையங்கள், ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன. வெள்ளையர்களை நேருக்கு நேராகப் போர்க்களங்களில் சந்தித்துக் கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் நேரடி நடவடிக்கைகளையே பெரும்பாலான பாளையக்காரர்கள் விரும்பினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சின்ன மருது, ஒரு மிகப்பெரும் அரசியல் யுக்தியை வகுத்தார். ஆங்கிலேயரை எதிர்த்த பாளையங்களின் எதிர்ப்புணர்வை ஓர் எதிர்ப்பணியாக மாற்றும் பெருமுயற்சியில் ஈடுபட்டார். 1790களில் அவர் இதைச் செய்தார். அவர் மூன்று திட்டங்களை வகுத்தார்.

1.ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைப்பது. 2. தமிழகக் காடுகள், மலைப்பகுதிகள் பற்றி ஆங்கிலேயர்கள் அறியாதவர்கள். ஆகையால், காடு மலைகளைப் போருக்கான இடமாக மாற்றி, மறைந்திருந்து, ‘கெரில்லா’ பாணி யுத்தம் செய்வது. 3. ஆங்கிலேயர் மையம் கொள்ளும் போர்க்களங்களில் பாளையக்காரர்கள் தம் படைகளை போர் செய்யும் இடங்களுக்கு அனுப்பி உதவிக் கொள்ளுதல். பெரிய மருதுவும், சின்ன மருதுக்கு ஆதரவாக இருந்தார். 

இதன் முதல் செயல்பாடாக எல்லாப் பாளையங்களுக்கும், சிற்றூர்த் தலைவர்களுக்கும் செய்திகள் அனுப்பி, அவர்களிடம் இந்தச் சிந்தனை பற்றிய கருத்தொற்றுமை ஏற்படுத்த முயன்றார். இதன் பயனாக, இராமநாதபுரம் சீமையின் தலைசிறந்த கிளர்ச்சிக்காரர் என்று ஆங்கிலேயரால் வர்ணிக்கப்பட்ட மயிலப்பன் மற்றும் சிங்கம் செட்டி, முத்துக்கருப்பத் தேவர் ஆகியோர் கூட்டிணைவுக்கு உடன்பட்டனர். தஞ்சாவூரின் ஞானமுத்து சோலை, மருதிருவரின் இந்த முயற்சியை ஏற்றார். சிவகிரிப் பாளையக்காரர் மாப்பிள்ளை வன்னியன், உட்பட பலரும் இணைந்தார்கள். ஒருபகுதி கூட்டிணைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், திண்டுக்கல் பகுதிக்கு கோபால நாயக்கர், கன்னட நாட்டின் துக்காஜி, மலபாரில் கேரளவர்மன், கோவையில் ஜானிஜகானும், கூட்டிணை என்று வரலாற்றில் பெயர் பெற்றது.

தென்னிந்திய அளவில் இது முதலாவது கூட்டணி என்றாலும் செயல்படுத்தப்பட சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்பது அதன் அவலம். தொடர்பு கொண்டு விஷயம் பரிமாறிக் கொள்ளுதல், படைப்பிரிவினை அனுப்புதல் போன்றவற்றில் இருந்த இடர்பாடு அவர்களை யோசிக்க வைத்தது. 1799ம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு அமரரானார். இதன் எதிரொலியாக மலபார் கூட்டிணைவு, பின்வாங்கி, கேரளவர்மன் உதவித் தொகை பெற்றுக்கொண்டு ஒதுங்கிக்கொண்டார். திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.

ஆனாலும், மனம் தளரவில்லை மருதுபாண்டியர். ஆங்கிலேய எதிர்ப்புணர்வைத் தட்டி எழுப்ப, ஓர் அறிக்கையைப் பாளையக்காரர் அறியவும், மக்கள் உணர்ந்துகொள்ளவும் வெளியிட்டார் சின்ன மருது. 18&ம் நூற்றாண்டில் இந்திய அரசியல் வானில், இதுபோன்ற ஒரு விளைவு நிகழ்ந்ததே இல்லை என்கிறார் வரலாற்றறிஞர் ராசையா. அந்த அறிக்கையை நாமும் வாசிப்போம். இந்த அறிக்கை வெளியிடப்பட்டது 1801&ம் ஆண்டு ஜூன் 16&ம் நாள் என்பதை மனதில் கொண்டு இதை வாசிக்க வேண்டும்.

‘ஜம்புத் த்வீப பிரகடனம்’

இதை யார் பார்த்தாலும் கவனமுடன் படிக்கவும்.

ஜம்பு(நாவலந்) தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலும் வாழ்கிற சகல சாதியினருக்கும் நாடுகளுக்கும் பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.

மேன்மை தங்கிய நவாப் முகமதலி முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்கள் அவர்களது நம்பிக்கைகளுக்கு மாறாக அவற்றைப் புறக்கணித்து, அந்த நாட்டை ஏமாற்றித் தமதாக்கிக் கொண்டதுடன், மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்துகின்றனர். உங்களிடையே ஒற்றுமை இல்லை. நட்பு இல்லை. ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல் முன்யோசனை இன்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள். இந்த இழி பிறவிகளால், ஆளப்படும் இந்த நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்கள் உணவு, வெள்ளம் (நீர் ஆதாராம்)தான் என்றாயிற்று. அவர்கள் இல்லாது இன்னல் உறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவு இல்லாதவர்கள் ஆனார்கள். இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதிலும் இதைப் போக்கச் சாவது எவ்வளவோ மேலானது என்பது உறுதி...

அந்த (ஐரோப்பியரின்) இழிபிறவிகளின் பெயர்கூட இல்லாதவாறு ஒழிக்க வேண்டி, அங்கங்கு பாளையங்களிலும், ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஒன்றுபட்டு ஆயுதமேந்திப் புறப்படுமாறு வேண்டப்படுகிறது. அப்போதுதான் ஏழைகளும் இல்லாதோனும் விமோசனம் பெறுவார்கள். எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப்போல, ஈனப் பிறவிகளின் வார்த்தைகளுக்கு அடிபணிகிற எவரேனும் இருப்பின் அவர்கள் கருவறுக்கப்பட வேண்டும்...

எனவே, வயல்களிலோ அல்லது வேறு துறைகளிலோ, அரசின் (சிவில்) பொது அலுவலகங்களிலோ இராணுவத்திலோ எங்கு வேலை பார்ப்பவராயினும்... இந்த இழிபிறவிகளின் இராணுவ சேவையில் உள்ள சுமேதார்கள், ஜமேதார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் எவராக இருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவரும் தங்கள் துணிச்சலைக் காட்ட இதோ உங்களுக்கு முதல் வாய்ப்பு வந்துவிட்டது...

எங்கெல்லாம் அந்த இழி பிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித் தொழியுங்கள். வேருடன் களையப்படும் வரை அவ்வாறு செயல்படுங்கள். இதனைக் கருத்தூன்றுங்கள். நிதானமாக யோசியுங்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாதவன் மீசை, அர்த்தமற்ற ரோமத்திற்குச் சமம். அவன் உண்ணும் உணவு சத்தொழித்து களையற்றுப்-போகட்டும். அவனது மனைவியும் குழந்தைகளும் இன்னொருத்தனுக்காகட்டும். அவை அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவைகளாகக் கருதப்படட்டும். எனவே, ஐரோப்பியரால் இன்னும் இரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்...

இங்ஙனம்

பேரரசர்களின் ஊழியன்

ஐரோப்பிய இழிபிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியர்கள்.

பெறுவோர்:

சீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள், ஆன்றோர், அனைத்துப் பொதுமக்கள்.

இந்த மாபெரும் ஆவணத்தை வெளியிட்ட சின்னமருதும், பெரிய மருதும் வஞ்சகத்தாலும், காட்டிக் கொடுக்கப்பட்டும் கைது செய்யப்படுகின்றனர். 1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் நாள் வெள்ளை மருதென்னும் மூத்த மருதும், சின்ன மருதும் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதே திருப்பத்தூரில் பெரிய மருதின் மகன் கருத்தம்பி, முல்லிக்குட்டி தம்பி, சின்ன மருதின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உட்பட பலரும் தூக்கு மரம் ஏற்கிறார்கள்.

சின்ன மருதின் கடைசிமகன் துரைசாமி மதுரைப் பக்கத்து ஒரு கிராமத்தில் கைது செய்யப்படுகிறான். அப்போது அவன் வயது 15. 

இளவரசன் துரைசாமி, 73 போர்க்கைதிகளோடு சேர்ந்து, கை கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, மிருகத்தனமாக நடத்தப்பட்டு, பினாங்கில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படுகிறார். வழியில் பலபேர் குடிக்கத் தண்ணீர் இன்றிச் செத்துப் போகிறார்கள். அங்கே சுமார் இருபது ஆண்டுகள் அடிமையாக, தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக வாழ்கிறார் துரைசாமி.

அவனைக் கைதுசெய்து கப்பலில் ஏற்றிய அதிகாரி வெல்ஷ், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவுக்கு ஒரு விடுமுறையைக் கழிக்கச் செல்கிறான். ஒரு நாள் காலை. அவன் முன்னால் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க, முகத்தில் சுருக்கமும், உடல் வளைந்தும் நோயால் இளைத்தும் காணப்பட்ட ஒருவர் அவன் முன் வந்து நிற்கிறார்.

‘யார் நீ?’ என்கிறான் வெல்ஷ்.

அந்த முதியவர் பதில் சொல்ல முடியாமல், தலைகுனிந்து கண்ணீர் அரும்ப நிற்கிறார். பிறகு ‘துரைசாமி’ என்கிறார். திகைத்துப் போகிறான் வெல்ஷ். 33 வயதில் 60 வயது முதுமை துரைசாமிக்கு. அவனுக்கு முன் நின்ற துரைசாமியின் தந்தை சின்ன மருதின் நண்பன்தான் வெல்ஷ். பலமுறை சின்ன மருதின் அரண்மனைக்குச் சென்று விருந்துண்டவன். சின்ன மருதுடன் வேட்டைக்குச் சென்றவன். சின்ன மருதுவிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டவன். நண்பனின் மகனைப் பார்த்து ‘நீயா?!’ என்கிறான் அந்த அதிகாரி. அவன் மனம் துன்பத்தில் ஆழ்கிறது. 15 வயதுச் சிறுவனாகக் கப்பல் ஏற்றிய அதிகாரி அவன்தான். ‘‘உனக்கு நான் என்ன செய்ய முடியும்?’’

‘‘ஒரு கடிதம். அதை ஊரில் உள்ள என் உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் சமாச்சாரத்தை அவர்கள் அறிய வேண்டும்’’

‘‘அது முடியாது. அது என் உத்தியோக வரம்புக்கு அப்பாற்பட்டது. சட்டப்படி அது தவறு’’

வெல்ஷ், துரைசாமிக்கு உதவி செய்யவில்லை. 1821 ம் ஆண்டு வாக்கில் விடுதலை பெற்று துரைசாமி மதுரைக்கு வருகிறார். மதுரையைச் சுற்றிய கிராமங்களில் தன் குடும்பத்தை, உறவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, மனம் உடைந்து சில ஆண்டுகளில் இறந்தும் போகிறார். வெல்ஷ், மிக வருத்தமுடன் துரைசாமியின் சந்திப்பைத் தன் டைரிக் குறிப்பில் எழுதி இருக்கிறார். மாவீரன் மருதுபாண்டியனின் கடைசி மகனின் கதை இது. 

சின்ன மருதுவின் அறிக்கை, பல முனைகளில் இன்றைக்கும் நமக்கு உதவக் கூடியவை. அந்நிய ஆதிக்கம், நவீன உருவில் வந்து ஊடுருவிக் கொண்டிருக்கும் காலம் இது. மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராக தமிழர் சிந்தனைகளைக் கட்டமைக்க மருதின் அறிக்கை உதவும்.

உதவிய நூல்கள்: மீ.மனோகரனின் ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ முனைவர் கு.மங்கையர்க்கரசி எழுதிய ‘மருதுபாண்டியர் வரலாறும், வழிமுறையும்’.

Friday, 4 November 2011

நாட்டுப்புறப் பாடல்களில் மருது பாண்டியர் வரலாறு



சிவகங்கைப் பகுதியில் வழங்கப்படும் கும்மிப் பாடல்களில் மருது பாண்டியர் வீரம், திருப்பணி, அரண்மனை கட்டியமை ஆகிய வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எள்ளைக் கழுவி இலையில் இட்டால்
கையில் எடுத்து எண்ணெயாய்த் தான் பிழிஞ்சு
உள்ளம் மகிழ உணவருந்தும் - மன
ஊக்கம் மிகக் கொண்ட பாண்டியனார் - மருதுபாண்டியனார்
என்ற கும்மிப் பாடல் மருது பாண்டியரின் வலிமையை உணர்த்துகிறது.
கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கொண்டு சேர்த்து
மருதைக் கோபுரம் தெரியக்கட்டிய
மருது வாராரு பாருங்கடி
குலவை போட்டு கும்மி அடியுங்கடி
கூடி நின்று கும்மி கொட்டுங்கடி
என்ற பாடலில் இருந்த கருமலையிலிருந்து கல்லெடுத்து வந்து சிவன் கோயிலை மருது பாண்டியர் கட்டினார் என்ற வரலாறு தெரிய வருகிறது.
செல்வம் மிகுந்த சிறுவயலில் - மன்னன்
சின்ன மருதுக்கு அரண்மனையாம்
சிவகங்கை அரண்மனைக்கு ஒப்பாக
சிறுவயல் தன்னில் மருதிருவர்
நவகோண அரண்மனை ஆசாரம் வாழ்ந்து
நாளும் உள்ளம் மகிழ்திருந்தார்.

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்



“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.


உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.


Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.
“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”


தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார்.
வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”


உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.


ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை – வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது.


இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் – அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”


மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:


Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் – சிறுவர்களும்கூட.
கோர்லே கூறுகிறார்:
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”


மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.


1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார்.
தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.


“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் – பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் – தூக்கிலிடப்பட்டனர்.


மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”


எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.
கோர்லே கூறுகிறார்:
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை.
நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் – இருந்த – இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது.
கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர்.

கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.
இது உண்மைக் கதையாக இருந்தால் – உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது – இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.


கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்


அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.


1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.


ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த விதவைகள் யார்?
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் – இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை.
இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.)
அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது.


ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.


மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள்.
நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் – 1816இல் வந்தது – இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century – 1813 London
2. Military Reminiscences – James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords – 1841, London


நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய ‘காலச்சுவடு’ இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் ‘பி.ஏ. கிருஷ்ணன்’ அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.