"வானுலகம் மிஞ்சும் மருதுபாண்டியரின் புகழை என்றும் மறக்கவும் முடியாது ,அழிக்கவும் முடியாது, வாழ்க மருது புகழ்"

Friday, 28 October 2011

மருது பாண்டியர்கள் - மகாராஜா



சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவன வற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப் பாடப்பெற்ற பல தனிப்பாடல்களும் அங்கங்கே வழங்கிவருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருட்டுப்பயம் முதலியன கிடையா. அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.

அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்துவரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களைக் கட்டி யிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழ்ச்சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக்குறித்து, “மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கிவருகிறது.
அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை, ‘எங்களப்பன்” எனச் சொல்லிவந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தமகுணங்க்ளும் அவர் பால் இருந்த அன்பும் புலப்படும். காளையார் கோவிலிலுள்ள மிகப் பெரிதான யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும்வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.

காளையார் கோவிலுக்குத் தேர் ஒன்று மிகப் பெரியதாக அமைக்கவேண்டுமென்று அவர் கருதித் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றை யெல்லாம் சேகரித்து முடித்தா. அத்தேரின் அச்சுக்கு ஏற்றதாக ஒரு பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்குச் செய்தி அனுப்பி விசாரித்து வந்தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரில் மிகப் பழையதும், பெரியதுமாக மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப் படுத்தலாமென்றெண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரி களுக்கு உத்தரவு அனுப்பினார்.
அதனைப் பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது, அதனைக் கேள்வியுற்று அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வருபவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியோர், “அந்த மரத்தை வெட்டக் கூடாது” என்று ஓடிவந்து தடுத்தார். “ராஜாக் கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?” என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஆத்திரம் மிக்கவராகி, “மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது!” என்று மீட்டும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் அஞ்சி வெட்டுதலை நிறுத்திவிட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்குத் தெரிவித்தார்கள்.
அதனை அறிந்த மருத பாண்டியர், “ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லி யிருக்கும்பொழுது அதைத் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்?? நாமே நேரிற் போய் இதை விசாரித்து வர வேண்டும்” என்றெண்ணித் தமது பரிவா ரங்களுடன் சென்று திருக்கோயில் வாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரஸாதங்களைப் பெற்று அணிந்து கொண்டார்.
அப்பால், “கோயிற் காரியங்கள் குறைவின்றி நடந்து வருகின்றனவா?” என்று விசாரித்தார். பின்பு, அவர்களை நோக்கி, ” இங்கே உள்ள குருக்களில் ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்ததாகக் கேள்விப் பட்டோம். நம்முடைய கட்டளையைத் தடுத்த அவர் யார்? இப்பொழுது அவர் எங்கே உள்ளார்?” என்று கேட்டார். அவர்கள், “இதோ, இப்பொழுதுதான் மகாராஜா அவர்களுக்குப் பிரஸாதங்கள் கொடுத்துவிட்டு அவ்விடத்துக்கு அஞ்சி மதுரைக்குப் போய்விட்டார். இவ்வளவு நேரத்திற்குள் வெகு தூரம் போயிருப்பார்.” என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.
புஷ்பவனக்குருக்கள், தாம் செய்த செயலால் தமக்கு என்ன துன்பம் வருமோ வென்றஞ்சி, மருத பாண்டியருடைய அதிகாரத்துக்குட்படாத இடத்திற்குப் போகவேண்டுமென்று கருதி, முன்னரே ஸித்தம் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறி, மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார்.

மருத பாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓரபய நிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்துவரும்படி ஒருவரை அனுப்பினா. அபயநிருபம் என்பது, பழைய காலத்தில் குற்றவாளி களுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்த பகைவர்களுக்கேனும், “நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது” என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப்போக்குவதற்காக எழுதப் படுவது.
அந்நிருபத்தைப் பெற்ற புஷ்பவனக்குருக்கள் திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு நின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அவரை இருக்கச் சொல்லி, “நீர்தாம் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று சொன்னவரோ?” என்று கேட்டார்.
குருக்கள்: ஆமாம், மகாராஜா!
பாண்டியர்: காளையார் கோயில் தேருக்கு உபயோகித்தற்காக நாம் அதை வெட்டச் சொல்லியிருக்கும்போது நீர் தடுக்கலாமா??
குருக்கள்: அதற்குத் தக்க காரணங்கள் இருந்தமையால்தான் அப்படிச் செய்தேன்.
உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோ வென்றும் குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோவென்றும் அஞ்சி அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை ஆவலோடு கவனித்து வந்தார்கள்.
பாண்டியர்: என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.
குருக்கள்: இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது; மதுரைச் சுந்தரேசுவரர் பொன்னணை யாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையை யாற்றிற் போட்ட பொழுது புஷ்பமாக ஆயிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி நாயன்மார் மூவரும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்து கொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவை போன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வருகிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் நாள்தோறும் வந்து வந்து வையையில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லுகிறார்கள். வையையில் எப்பொழுதும் நிறைய ஜலம் ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் கொஞ்சம் ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.
மருத பாண்டியர், இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொது ஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்துகொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.
“மகாராஜாவுக்கு, இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரும் பயன் தெரிந்திருந்தால் இப்படிக் கட்டளை பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டிவிட்டால், அயலூர்களிலிருந்து, பிரார்த்தனை களைச் செலுத்தும்பொருட்டு, ஸ்நாநம் செய்துவிட்டுவரும் கர்ப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற்காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸமஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த ஒரு மரந்தான் இருக்கிறதென்பதில்லை, இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது பல ஜனங்களுடைய தாபத்தைப்போக்கி அவர்களுள்ளங் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப் போல் விளங்கிவருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் என்னுடைய மனத்தில் அதிகமாகப் பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பதே, மகாராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?” என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.
பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, “ஹா!ஹா!” என்று தங்கள் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள். “மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது” என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.
பராமுகமாகக் கேட்டுக் கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களைப் பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண்டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதை அவர் உணர்ந்து, “சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம் மேல் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்களின் மேல் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்.” என்று கூறினார்.
மருத மரம் வெட்டப்படாமல் நின்றது. குருக்கள் அச்சம் நீங்கினார். காளையார் கோயில் தேருக்கு வேறொரு மரம் அச்சு ஆயிற்று.
சிறு வயல் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கத் தேவரவர்களும், குன்றக்குடி மடத்தில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையவர்களும் இந்த வரலாற்றை சொன்னார்கள்.

மயிலப்பன் சேர்வைகாரர்


மயிலப்பன் சேர்வைகாரர்

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி.

வரலாறு :


தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 - 1809) பங்கு மிக சிறப்பான இடத்தைப் பெற்றது. அவரது நல்லாட்சி மேலும் தொடர முடியாதபடி மன்னரை 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. தங்களது சூழ்ச்சியினால் மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.

கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். மன்னரில்லாது மயங்கிய குடிகளுக்கு வழிகாட்ட முன் வந்தார் ஓர் இளைஞர். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் இவரை மக்கள் அன்புடன் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" அழைத்தனர்.

1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். [[[1799]], ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டதும் கமுதியில் உள்ள கச்சேரியை நிர்மூலமாக்கியும் பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டதும் ஆகிய போராளி செயல்கள் மயிலப்பன் சேர்வைகாரரின் தலைமையில் தான். இப்போராளிச் செயல்களால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் புதிய தென்புடன் குபெனியாரைத் துரத்திவிட்டு மீண்டும் ரெபெல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்திவிடலாம் என நம்பினர்.

தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.

போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்க்ளுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டது வரலாற்றுச் சிறப்பாகும்.

மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை

தூக்கிலிடப்படல் :


ஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801, அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கு மேடையில் வீர மரணமடைந்தனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். ஒரு நாள் கொடியவன் ஒருவன் கம்பெனியாரின் தூண்டுதலின் பேரில் பொருளாசை காரணமாக சேர்வைகாரரின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தான். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையை மேற்கொண்ட மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலப்பட்டார்.

Tuesday, 25 October 2011

படங்கள்























































வீர மருதிருவர் வரலாறு



மாமன்னர் மருது பாண்டியர்கள் இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.

ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் 

ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.


மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.தொடரும் . . . . . . . .


வீரமும் திறமையும் வெளிப்படுதல
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. 


முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பு
சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.
இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.
வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.
இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3
விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.
சிவகங்கைச் சீமை மீட்பு - 41772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.


மருது பாண்டியர் ஆட்சிப் பொறு
ப்பு
அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்."எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்"என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.


அறப்பணிகளும் மக்கள் தொண்டு
ம்
வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.
காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.


பசும்பொன் ஆண்டுமலரிலிருந்துவீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்த
ஆங்கிலேய படையெடுப்பு - 5இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.


போர் பிரகடனம்:
சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.
இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.


தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.
நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..

பசும்பொன் தேவர் வரலாறு



உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.
இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.
வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்.
குடும்ப பரம்பரை :
அதிசிறை மீட்டத்தேவர் -கருப்பாயி என்கிற தம்பதியினர்க்கு நான்கு மகன்கள். வெள்ளைச்சாமி என்ற சிறைமீட்டத்தேவர் நாகலிங்கத்தேவர், முத்துராமலிங்கத்தேவர், நவநீதக் கிருஷ்ணத்தேவர் இதில் முத்துராமலிங்கத்தேவரை ஆதிமுத்துராமலிகத் தேவர் என வைத்துக்கொள்வோம். இவர் தான் வீட்டை பெரும் உழைப்பால் பெருங்குடியாக்கினார். இருந்தாலும் மிகவும் நேர்மையாளராகத் திகழ்ந்தார். ஆதி முத்துராமலிங்கத்தேவரின் நேர்மையும் நெறிவழுவாத தன்மையும் கண் இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி ராஜா நெருங்கிய தொடர்பு கொண்டார். அதன்பிறகு அரண்மணைக்கு சாதாரணமாகப் போகக் கூடிய உரிமை அவருக்கு மட்டும் இருந்து வந்தது. இதனால் பெரும் ஜமீன்தார் ஆகும் அளவிற்கு ஆதிமுத்துராமலிங்க சேதுபதிராஜா அவர்கள் நிலபுலன்கள் கொடுத்து ஜமீன்தார் ஆக்கினார்.
தேவர்த்திருமகனுக்கு பெரும் உதவியாக இருந்தவர் பிறந்ததும் இக்கால கட்டத்தில்தான் இவர் வேளாளர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் பிறவியிலேயே அனாதையான அவரை ஆதிமுத்துராமலிங்கத்தேவரே வளர்த்து வந்தார். இவரது பெயர் குழந்தைச்சாமி என்ற வைத்திய பிள்ளையாகும். இவர்கள் நான்கு பேர்களில் வெள்ளைச்சாமி என்ற சிறை மீட்டத்தேவர் பொன்னம்மாள் என்பவரை மணந்துகொண்டார். இந்த சிறப்பு பெற்ற தம்பதியினர்க்கு மீனாம்பிகை என்ற மகளும் உக்கிரபாண்டி என்ற மகனும் பிறந்தார்கள்.
காலம் மெல்ல நகர்ந்து வெள்ளைச்சாமி தேவர் பெரும் செல்வந்தரானார். அதாவது (32 1/2) முப்பத்திரண்டரை “கிராம அகில்தா” என்ற சிறப்பைப் பெற்று விளங்கியது. இதனை முழுமையாக செயல்படுத்தும் திறமையுடையராய் உக்கிரபாண்டித்தேவர் செயல்பட முடியவில்லை எனவே ஆதிமுத்துராமலிங்கத்தேவர் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வந்த வைத்திய பிள்ளை அவர்களை உதவியாளராக நியமித்தனர்.பெரும் குடும்பங்களில் இரண்டு மூன்று முறைப்பெண்கள் இருந்தால் பெண் திருமணம் செய்வதில் பெரும் சண்டை வரும் எனவே உக்கிரப்பாண்டித்தேவருக்கு இரண்டு அத்தைமார்கள் அவர்களிடையே சண்டை வரக்கூடாது என்பதற்காக இந்திராணி என்பவரையும் காசிலட்சுமி என்பவரையும் உக்கிரபாண்டித்தேவர் திருமணம் செய்துகொண்டார். 31.8.1906 ஆம் ஆண்டு ஆவணித்திங்க்ள் 16 ஆம் நாள் அரசர்கள் வீட்டுத்திருமணம் போல் வெகு சிறப்பாக நடந்தது. இதில் திருமணமானாலும் காசிலெட்சுமி என்பது வயதான பருவமடைந்த பெண் என்பது குறிப்பிடத் தக்கது.
அழகிலும் அறிவிலும் அடுத்தவரை உபசரிக்கும் பண்பிலும் சிறந்தவராகவும் பெண்களின் அரசியாகவும் இந்திராணி அம்மையார் திகழ்ந்தார். இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜானகி’ எனப்பெயரிட்டார்கள். பெயரிட்ட நாளன்று திருவிழா போல அந்நாளைக் கொண்டாடினார்கள். குழந்தை ‘ஜனாகி’ வருகையால் உற்றார் உறவினர் எல்லோரும் சந்தோஷ கடலில் மூழ்கினார்கள். ஐந்தாம் மாதம் முடியும் தருவாயில் குழந்தை ஜானகிக்கு விஷக் காய்ச்சல் வந்தது. தான் வசதி என்றால் என்ன பண்ண முடியும். தனது ஐந்தாம் மாதம் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டது குழந்தை ஜானகி.
உக்கிரப்பாண்டித்தேவரும் இந்திராணி அம்மையாரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பலபேர் உலக நடைமுறைகளைப் பற்றி எடுத்துக்கூறி மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பினார்கள்.முருகப் பக்தி கொண்டவர் இந்திராணி அம்மையார். அந்த முத்துவயல் ஞானியை இந்திராணி அம்மையார் மீண்டும் பக்தியோடு நினைவுக் கூறத்தொடங்கினார். அந்த முருகப் பெருமானின் திருத்தொண்டரான ஞானியை எண்ணி மனங்கலங்கி நீங்கள் அன்று கனவில் தோன்றி நல்வாக்குச் சொல்லி திருநீரு கொடுத்தீர்கள். ஆனால் என் மகள் மறைந்தாளே என்று வாய்விட்டு அழுது வருந்தினார். இந்திராணி அம்மையார் ஏழை எளிய மக்களை மிகவும் நேசமுடன் நடத்துபவர் ஆவார். இளகிய மனமும் இனிமையான குணமும் கொண்டவர் இந்திராணி அம்மையார்,ஆகவே தேவர் திருமகன் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் காலத்து வந்தவர்தான் நமது தேவர்திருமகன்.முத்துராமலிங்கத தேவர் அவர்கள் பல்வேறு ஆவனங்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிறப்பு :
30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன் பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது.வீரமும், விவேகமும், நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்கவேண்டும் என்று அப்பெயரையே தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே இவர் முத்துராமலிங்கம் என்று அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில் அளவுகடந்த எல்லையைத் தாண்டிய அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு கருணை இல்லையே.
உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும் இடி விழுந்தது என்றே சொல்ல முடியும். அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர் திருமகன். அப்போது குழந்தையின் அழுகைசத்தம் கேட்டு உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார். அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும் வரையிலும் இருந்தது. ஆகத் தன் வாழ்நாளில் தாய் தந்தை பாசமே அறியாது இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.துன்பங்கள் என்பது மழையில் இருக்கும் கல்லை உருட்டி பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதுபோல மீண்டும் ஒரு துன்பம் உக்கிரபாண்டித்தேவரை மேலும் தாக்கியது. அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.
தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள். தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டிமார்கள் :
இந்திராணி தேவியார் இறந்துபோன பிறகு உக்கிரபாண்டித்தேவரின் போக்கில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன.இதற்கிடையில் உக்கிரபாண்டித்தேவரிடம் குழந்தைச்சாமி பிள்ளையைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சுமத்தி 32 கிராம நிர்வாகத்தையும் பார்த்து வந்த குழந்தைச்சாமி பிள்ளை நீக்கப்பட்டார். இவர் பேச்சாற்றல் மிக்கவர். கணக்கு வழக்குகளை சிக்கனமாக வைப்பதில் கெட்டிக்காரர் என்றும் நல்ல விசுவாசி என்றும் பெற்றிருந்தார். இருந்தும் மிகவும் நன்றியோடு இருந்த குழந்தைச் சாமி இந்திராணி அம்மையார் இருந்திருந்தால் குடும்பம் இவ்வளவு சீரழிந்து போயிருக்குமா? என்று எண்ணி வருந்தினார்.
அதனால் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டி ராணியம்மாள் அவரை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றார்.கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தார்.சிறுகுழந்தை பருவத்தில் மிகவும் துடிப்புடனும் பொறுமையுடனும் எதையும் நினைத்தால் செய்துமுடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனும் சிறுவயதிலிருந்தே செயல்பட்டார். சிறுவயதில் ஒரே ஒரு விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்தமானது மரத்தின் உச்சிக்கு ஏறி கால்களை பிண்ணிக்கொண்டு தலைகீழாக தொங்குவது அவருக்கு பிடித்தமான ஒர் விளையாட்டு.
கல்வி வாழ்க்கை :
ஆறுவயதில் தேவர் திருமகனின் கல்வி வாழ்க்கை தொடங்கியது. அக்கால வழக்கப்படி குருகுல வாழ்க்கையைக் கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர் ஆசிரியர் வாயிலாக கற்றார். மேலும் பல, ஆசிரியர்களிடம் கல்வி பயின்று வந்தார்.1917 ஆம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிசன் ஆரம்பப்பள்ளியில் சேர்ந்து பயின்று வந்தார்.முத்துராமலிங்கத்தேவர் இயற்கையாகவே பல நல்ல குணநலன்களைப் பெற்றிருந்தார். அவர் இளைமையிலேயே சொல்களை திருத்தமாக பயின்றுவந்தார். அவர் வேலையை அவரே கவனித்துக்கொள்வார். இளமை முதற்கொண்டு திருநீரு பூசும் பழக்கம் தேவர் திருமகன் கடைபிடித்து வந்தாராம். ஆடம்பரமான ஆடை அணிகள்மேல் அவருக்கு விருப்பம் இல்லை. துய ஆடை அணிவதில் ஆர்வம் கொண்டு விளங்கினார்.
தேவர் திருமகனார் தெய்வீகச் செல்வராய் வளர்ந்து பள்ளி வளாகத்தில் ஒளிவிளக்காக நிமிர்ந்து நின்ற காலகட்டத்தில் உக்கிரபாண்டியதேவர் பலவித அனாவசிய செலவுகளை உண்டாக்கிக் கொண்டு வேண்டாத நண்பர்களுடன் நட்பு கொண்டு வருமானத்தையும் மீறிய செலவு செய்தார். சொத்துக்கள் எல்லாம் அழிந்தன. மீண்டும் குழந்தைச்சாமி பிள்ளை அவர்களின் முயற்சியில் மீண்டும் சொத்துக்கள் பெறப்பட்டது.
ஆசிரியருக்கே அறிவுரை :
1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தவர்.ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்:
“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.